Posted in

செஞ்சி அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற மர்ம கும்பல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரின் 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (நவம்பர் 9) இரவு பெட்டிக்கடைக்குச் சென்றுவிட்டு அந்தச் சிறுமி நடந்து வந்தபோது, ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுமியைக் கடத்த முயற்சி செய்துள்ளனர். அச்சமடைந்த சிறுமி சத்தமிட்டு அலறியதை அடுத்து, பொதுமக்கள் ஓடி வருவதைக் கண்ட மர்ம நபர்கள் சிறுமியைச் சாலையிலேயே விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான நிலையில், 30 நாட்களாகியும் அவர் குறித்து எந்தத் தடயமும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே ஒரு சிறுமி மாயமான வழக்கின் மர்மம் விலகாத நிலையில், மீண்டும் ஒரு சிறுமியைக் கடத்த முயற்சி நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தப்பி ஓடிய மர்ம நபர்களைப் பிடிக்கச் செஞ்சி காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்பகுதியில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தவும், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர்களை விரைவில் கைது செய்யவும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.