அமெரிக்கா-ஈரான் போரின் விளைவாக உலகம் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு, சீராக இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பிரோல் (Fatih Birol) பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இன்னும் வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே தேவையான விமான எரிபொருள் (Jet Fuel) கையிருப்பில் உள்ளதாகவும், மே மாத இறுதிக்குள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கோடைக்கால விடுமுறைக்குத் திட்டமிட்டுள்ள ஐரோப்பா வாழ் தமிழர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் எரிபொருள் கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளதால், மார்ச் மாதத்திற்குப் பிறகு புதிய எரிபொருள் விநியோகம் எதுவும் உலகச் சந்தைக்கு வரவில்லை. “நாம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை இப்போது எதிர்கொள்கிறோம்” என்று கூறியுள்ள பிரோல், ஒருவேளை இப்போதே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கி ஜலசந்தி திறக்கப்பட்டால் கூட, போர்ச் சூழலில் சேதமடைந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட எரிபொருள் உற்பத்தி நிலையங்களைச் சீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும் என்றும், இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விமானக் கட்டணங்கள் ஏற்கனவே இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக, லுஃப்தான்சா (Lufthansa) மற்றும் ரியான் ஏர் (Ryanair) போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் தங்களது பல முக்கியச் சேவைகளை ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. வரும் மே மாத பாதியில் ஐரோப்பாவில் பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்க உள்ள நிலையில், அதற்குள் எரிபொருள் தீர்ந்துபோனால் லட்சக்கணக்கான பயணங்கள் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. இது சுற்றுலாத்துறையைப் பெரிதும் நம்பியிருக்கும் பல நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கக் கூடும்.
எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க கடந்த மாதம் 400 மில்லியன் பேரல் எண்ணெயைச் சந்தையில் வெளியிட்ட போதிலும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை. ஈராக் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தித் திறனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியம் அல்ல என நிபுணர்கள் கருதுகின்றனர். ஜப்பான், கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த எரிசக்தி நெருக்கடியால் பெரும் சவால்களைச் சந்திக்கப் போகின்றன. தற்போதைய சூழலில், விமானப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள் தங்கள் டிக்கெட் நிலவரத்தைத் தொடர்ந்து கவனிப்பதோடு, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதே நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.