Posted in

தவெக அமைப்பில் பெரிய மாற்றம்… தலைவருக்கு கூடுதல் அதிகாரத்துடன் புதிய தொழிற்சங்கம்!

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) பல்வேறு சார்பு அணிகள் இயங்கி வரும் நிலையில், மிக முக்கியமான சார்பு அணியான தொழிற்சங்கப் பேரவை இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில, “வெற்றி தொழிற்சங்க பேரவை” என்ற பெயரில் புதிய தொழிற்சங்க அமைப்பை உருவாக்குவதற்கான அனைத்துக் கட்டப் பணிகளையும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் நிறைவு செய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் கட்சி விதிகளில் (Bylaws) சில முக்கிய மாற்றங்களைச் செய்து இந்தத் தொழிற்சங்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களில் பொதுச்செயலாளர் பதவிக்கே முதன்மை அதிகாரமும் முக்கியத்துவமும் அளிக்கப்படும். ஆனால், தவெகவின் ‘வெற்றி தொழிற்சங்க பேரவை’ அமைப்பில் தொழிற்சங்கத்தின் தலைவருக்கே அதிகப்படியான அதிகாரங்களை வழங்கிப் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு அடுத்தபடியாகவே தொழிற்சங்கச் செயலாளர் பதவி அதிகாரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் இந்த வெற்றி தொழிற்சங்க பேரவையின் தலைவராகத் தவெகவின் முக்கிய நிர்வாகியான பரணி பாலாஜி நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தொழிற்சங்கத்தின் செயலாளராகக் கமலக்கண்ணன் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இவர் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் பல ஆண்டுகள் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி, தொழிற்சங்க நுணுக்கங்களை முழுமையாக அறிந்த அனுபவமிக்கவர் ஆவார்.

அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளில், மாநில அளவிலான கட்சிப் பதவியைப் பெறப்போகும் முதல் நபர் கமலக்கண்ணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களைக் கட்சிக்குள் ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வெற்றி தொழிற்சங்க பேரவை’ அறிவிப்பு, வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.