ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே அடைபட்டுள்ள நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் கப்பல்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள ஹூதிகள், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ‘பாப் எல்-மண்டேப்’ நீரிணையை மற்றொரு நெருக்கடி முனையாக (Chokepoint) மாற்ற அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஹூதிகளின் தாக்குதலுக்கு இலக்கான ‘என்சீலியா’ (Encelia) என்ற சவூதி கச்சா எண்ணெய் கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்ததைச் சவூதி அரேபியாவின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. ‘லைலா’ (Layla) என்ற மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை கோரியுள்ளனர். இதன் காரணமாக, செங்கடல் வழியே ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற பல பிரம்மாண்ட கப்பல்கள் பாதுகாப்பு கருதித் தங்களது பயணப் பாதையை மாற்றித் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
பாரசீக வளைகுடாவில் ஈரான் ஏற்கனவே நடத்திய முற்றுகையால், சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெயைச் செங்கடலில் உள்ள ‘யான்பு’ (Yanbu) துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் தற்போது ஹூதிகள் பாப் எல்-மண்டேப் நீரிணையையும் முடக்க முற்படுவதால், சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் எரிபொருள் பற்றாக்குறையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் 12-வது நாளாக நீடித்து வரும் சூழலில், ஹூதிகளின் இந்த அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்குக் பிராந்தியப் போரை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சவூதி துறைமுகங்கள் மீது ஹூதிகள் அறிவித்துள்ள இந்த முற்றுகை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், செங்கடலில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கக் கடற்படை கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.