Posted in

சீனாவின் ஆதிக்கத்திற்குச் அடி: இந்தியா – அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா ஒப்பந்தம்!

சர்வதேச அளவில் அத்தியாவசியக் தாதுக்கள் மற்றும் அரிய வகை கனிமங்கள் (Rare Earth Elements) விநியோகத்தில் சீனாவின் ஏதேச்சதிகார ஏகபோக ஆதிக்கத்தை ஒட்டுமொத்தமாக முறியடிப்பதற்காக, இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு மூலோபாய ஒப்பந்தத்தில் (Critical Minerals Framework) இன்று கையெழுத்திட்டுள்ளன . புதுடெல்லியில் நடைபெற்ற ‘குவாட்’ (Quad) கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் பக்கவாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த மெகா உடன்படிக்கையை முறைப்படி பரிமாறிக்கொண்டனர் .

இந்த புதிய கூட்டுறவு கட்டமைப்பானது சுரங்கத் தொழில், கனிமங்களை சுத்திகரிப்பு செய்தல், மறுசுழற்சி மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப முதலீடுகள் என ஒட்டுமொத்த அரிய தாது விநியோகச் சங்கிலியையும் (Supply Chain) பலப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.  அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தூய்மையான பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள், விண்வெளி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்கள் (EV) தயாரிப்பிற்கு மிக அத்தியாவசியமான இந்த மூலப்பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நம்பகமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகளாவிய அரிய வகை கனிமங்களின் சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு சந்தையில் சீனா மட்டுமே சுமார் 70 முதல் 80 சதவீத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இந்த ஒற்றை ஆதாரச் சந்தையை நம்பியிருக்கும் உலக நாடுகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி, சீனா அவ்வப்போது விதிக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கியப் பின்னணியாகும். அமெரிக்க அரசு தனது தனியார் துறையுடன் இணைந்து இந்த விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க 30 பில்லியன் டாலருக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய்) நிதி மற்றும் முதலீட்டு ஆதாரங்களைத் திரட்டி வருவதாக வாஷிங்டன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் போட்டித்தன்மையை சர்வதேச அரங்கில் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றியமைத்து, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய சமநிலையை உருவாக்கப் போகும் இந்த இருதரப்பு நடவடிக்கை, சர்வதேச புவி அரசியல் அரங்கில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.