இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக ஊடகத் தளத்தில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் வகையிலான கட்டண விளம்பரங்கள் (Paid Ads) பரப்பப்பட்டு வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவலை அடுத்து, இந்திய மத்திய அரசு மெட்டா (Meta) நிறுவனத்திற்கு அதிரடியாகக் கடுமையான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், அத்தகைய விளம்பரங்களையும், அதற்கு வழிவகுக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக முடக்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
பிரிட்டனின் முன்னணி ஊடகமான ‘பிபிசி’ (BBC Eye) நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கங்களில் “பாலியல் வன்கொடுமை வீடியோ” உள்ளிட்ட சில அநாகரிகமான முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும், அந்த விளம்பரங்களின் லிங்க்குகள் (Links) நேரடியாக டெலிகிராம் (Telegram) செயலியில் உள்ள சில ரகசிய சேனல்களுக்குப் பயனர்களை அழைத்துச் செல்வதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. வெறும் 99 ரூபாய்க்கு இதுபோன்ற சட்டவிரோத வீடியோக்கள் டெலிகிராமில் விற்பனை செய்யப்படுவதும், அதற்கு இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் நுழைவாயிலாக இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் அவற்றின் கடுமையான தணிக்கை மற்றும் சரிபார்ப்பு முறைகளுக்குப் பிறகே நேரலையாக ஒளிபரப்பப்படும் என்ற விதி இருக்கும்போது, இத்தகைய கொடூரமான விளம்பரங்கள் எவ்வாறு மெட்டா நிறுவனத்தின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியாயின? என்று ஐடி அமைச்சக அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் டிஜிட்டல் சட்டங்களின்படி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த உள்ளடக்கங்களைப் பரப்புவது தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67(B)-ன் கீழ் கடுமையான மற்றும் பிணையில்லா குற்றவியல் குற்றமாகும் என்பதால், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரத்தில் உடனடியாகச் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, மெட்டா நிறுவனம் தங்களின் தரப்பிலிருந்து முதற்கட்ட விளக்கத்தை அளித்துள்ளது. அதில், தங்களின் தளங்களில் இத்தகைய குற்றங்களுக்கு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) கொள்கை கடைப்பிடிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள நிறுவனம், எந்தவொரு தணிக்கை முறையும் 100 சதவீதம் குறைபாடற்றதாக இருப்பதில்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட உடனே, அந்த குறிப்பிட்ட விளம்பரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட கணக்குகள் மற்றும் தொடர்புடைய இணையதள முகவரிகள் (URLs) முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.