தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது எப்போது என்பது குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி வழங்குவதற்கான நிதிநிலை சாத்தியக்கூறுகள் குறித்துப் புதிய அமைச்சர்கள் தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்துத் தவெக அரசின் முக்கிய அமைச்சர்கள் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளனர்.
தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த கால நிதி மேலாண்மை மற்றும் தற்போதைய அரசின் பொருளாதாரச் சுமை ஆகியவற்றை மக்களுக்கு முழுமையாகத் தெரியப்படுத்திய பிறகே புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனக் குறிப்பிட்ட அவர், மகளிருக்கான ரூ.2,500 உரிமைத்தொகை உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வரவிருக்கும் திருத்தப்பட்ட புதிய பட்ஜெட்டில் (Budget) இடம்பெறும் என்கிற ஹேப்பி நியூஸையும் பகிர்ந்துள்ளார்.
அதே நேரத்தில், இத்திட்டத்தை அனைத்து மகளிருக்கும் விரிவுபடுத்துவது மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அமைச்சர் அருண்ராஜ் கோவை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்தபடி, இந்த பிரம்மாண்ட திட்டத்தை எவ்விதத் தொய்வுமின்றி அமல்படுத்த அரசுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. தற்போதைய நிதிநிலைமைக்கு ஏற்ப தவெக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், முந்தைய மகளிர் உரிமைத்தொகை வழங்கலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் பிற மாநிலப் பெண்களுக்குத் தொகை வழங்கப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் திமுக அரசு பொறுப்பேற்ற பின், சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்தே மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைத் தொடங்கியது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அரசியல் விமர்சகர்கள், தவெக அரசும் தற்போதைய நிதிச் சுமையைக் குறைத்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பின்னரே முழுமையாக ரூ.2,500 தொகையை இல்லத்தரசிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பத் தொடங்கும் என எதிர்பார்க்கின்றனர். அதுவரை தற்போதைய நடைமுறையான ரூ.1,000 உரிமைத்தொகைத் திட்டம் பயனாளிகளுக்குத் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும் என்றும் கோட்டை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.