கல்வித் தகுதிச் சான்றிதழ் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் பதவி நீக்க அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜிப்ரான் சமர்ப்பித்த வெளிநாட்டுப் பள்ளிச் சான்றிதழின் சமநிலை ஆவணம் செல்லாது என இந்தோனேசிய உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தன. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர ஆதரவு தெரிவித்தனர். இந்தச் சூழலில், ஜகார்த்தாவில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை நேரில் சந்தித்த ஜிப்ரான், தற்போதைய சூழல் நீண்டகால அரசியல் சர்ச்சையாக மாறுவதைத் தான் விரும்பவில்லை எனக் கூறி தனது ராஜினாமா விருப்பத்தைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள இந்தோனேசிய அதிபர் மாளிகை, ஜிப்ரானின் ராஜினாமாவை அதிபர் பிரபோவோ நிராகரித்துவிட்டதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது. பேச்சுவார்த்தையின் போது அதிபர் பிரபோவோ பொறுமை காக்குமாறு அறிவுறுத்தியதாகவும், தனது ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிர்வாக நீதிமன்றத்தின் (State Administrative Court) மூலம் நிரூபிக்கத் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு துணை அதிபர் ஜிப்ரான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசுச் செயலாளர் பிரசேத்யோ தெரிவித்துள்ளார்.
தற்போது ஜிப்ரான் ரகாபுமிங் ராகா தனது கல்விச் சான்றிதழ்களின் சட்டப்பூர்வத் தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தோனேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.