Posted in

இந்தியாவின் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்தது பாகிஸ்தான்! இந்தியத் தூதர் அதிரடி விளக்கம்..

பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை’ (Indus Waters Treaty) இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி (Abeyance) வைத்த முடிவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா தீவிரமாக நியாயப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் பிரபல ‘நியூஸ்வீக்’ (Newsweek) இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், அரை நூற்றாண்டிற்கும் மேலாகப் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் முட்டுக்கட்டைகள் மூலம் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நம்பிக்கையையே “கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துவிட்டது” என அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ‘நல்லெண்ணம் மற்றும் நட்புறவின்’ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டிய தூதர் குவாத்ரா, பாகிஸ்தான் தனது தொடர்ச்சியான போர்கள், ஊடுருவல்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் மூலம் அந்த நல்லெண்ணத்தை முற்றிலும் அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். “பாகிஸ்தானின் கடந்த காலச் செயல்பாடுகள் ஏற்கனவே எதனை அழித்துவிட்டனவோ, அதைத் தான் இந்தியாவின் இந்த இடைநிறுத்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக உணர்த்தியுள்ளது” என்றும் அவர் தனது கட்டுரையில் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2025 ஏப்ரலில் காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரைப் பலிவாங்கிய கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகே இந்தியா இந்தத் தீர்க்கமான முடிவை எடுத்ததை நினைவு கூர்ந்த அவர், நீர் மின் திட்டங்களுக்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாகிஸ்தான் பல தசாப்தங்களாகத் திட்டமிட்டு முடக்கியதாகச் சாடினார். “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது; அதேபோல் ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் உலகரங்கிற்கு வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் நாட்டின் மோசமான நீர் மேலாண்மை மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே பாகிஸ்தான் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராக மாநாடுகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட குவாத்ரா, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்பினால் முதலில் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை முழுமையாக அழிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரின் இந்த அதிரடி அறிக்கை, சர்வதேச இராஜதந்திர அரங்கில் பாகிஸ்தானின் போலிப் பிரசாரத்திற்குப் பலத்த அடியாக அமைந்துள்ளது.