மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை முற்றிலும் மீறும் வகையில், குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது ஈரான் பேலிஸ்டிக் ரக ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அதிரடி தாக்குதலை அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது ஈரான் அரசு மேற்கொண்ட மிக மோசமான போர் நிறுத்த விதிமீறல் என்றும் கடுமையாக சாடியுள்ளது. எனினும், குவைத் நாட்டு வான் பாதுகாப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு அந்த ஏவுகணையை நடுவானில் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. ஈரானிய படைகள் அமெரிக்க இலக்குகளை நோக்கி ஐந்து கமிக்காசி (தற்கொலைப்படை) ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றை அமெரிக்க பாதுகாப்பு படையினர் நடுவானில் அழித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆறாவது ட்ரோன் ஏவப்படுவதை தடுப்பதற்காக, தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஈரானிய கட்டுப்பாட்டு மையத்தின் மீது அமெரிக்கா முன்னெச்சரிக்கையாக தற்காப்பு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாகவே, பந்தர் அப்பாஸ் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பழிவாங்க குவைத் தளம் மீது ஏவுகணையை ஏவியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் உலக நாடுகளின் சமரச முயற்சியால் இருதரப்பிற்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹார்முஸ் நீரிணையை வணிக கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்க முயன்று வரும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த திடீர் ராணுவ மோதலைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 3 சதவீதம் வரை உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 97 டாலராக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் வெளியுறவு அமைச்சகம் ஈரானுக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது குவைத்தின் இறையாண்மையை அச்சுறுத்தும் ஒரு கூட்டு பயங்கரவாத நடவடிக்கை என்று குவைத் விமர்சித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த தூதரக ரீதியாக பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில், ஈரானின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.