Posted in

அமெரிக்க கரன்சியில் டிரம்ப் முகம்? 250 டாலர் நோட்டு வெளியிட அதிகாரிகள் தீவிர முயற்சி

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய 250 டாலர் பணத்தாள்களை (Banknote) அச்சடிக்க அவரது நிர்வாக அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நிதித்துறையின் கீழ் இயங்கும் கரன்சி அச்சடிப்பு வாரியத்திற்கு (Bureau of Engraving and Printing), டிரம்பால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த புதிய வடிவமைப்பை உருவாக்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கரன்சி நோட்டின் நடுப்பகுதியில் டிரம்பின் படம் இடம்பெறும் வகையில் முன்மாதிரி வடிவமைப்புகளை (Prototypes) தயார் செய்யுமாறு கரன்சி அச்சடிப்பு வாரிய ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறினால், கடந்த 150 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில், உயிருடன் இருக்கும் போதே பணத்தாளில் முகம் இடம்பெறும் முதல் நபர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெறுவார். தற்போது அமெரிக்கக் கரன்சிகளில் மறைந்த தலைவர்களின் படங்கள் மட்டுமே அச்சிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஓவியர் இயன் அலெக்சாண்டர் என்பவர் இந்த 250 டாலர் நோட்டிற்கான ஆரம்பக்கட்ட வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த வடிவமைப்பைப் பார்த்த டிரம்ப், அதில் அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களையும், நாட்டின் 250-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சின்னத்தையும் சேர்க்குமாறு சில மாற்றங்களைப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடைமுறையில் உள்ள கூட்டாட்சி சட்டங்களின்படி உயிருடன் இருக்கும் நபர்களின் படங்களை நோட்டுகளில் அச்சிட அனுமதி இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த வாரியத்தின் மூத்த பெண் அதிகாரி ஒருவர் கடந்த மாதம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க நிதித்துறை, கரன்சி அச்சடிப்பதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் பணத்தாள்களை அச்சிட அதிகாரிகள் யாரும் ஊழியர்களை வற்புறுத்தவில்லை என்றும் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது. எனினும், ஒரு புதிய பணத்தாளை வடிவமைத்து புழக்கத்திற்குக் கொண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், தற்போதைய அதிகாரிகளின் இந்த அவசர நடவடிக்கை வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.