Posted in

ரகசிய அணுசக்தி தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் ஈரான்? உலகை அதிர வைத்த புதிய சாட்டிலைட் ஆதாரங்கள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் வான்வழித் தாக்குதல்களால் கடுமையான சேதங்களைச் சந்தித்த தங்களின் ரகசிய அணுசக்தி மற்றும் ஏவுகணை தளங்களை ஈரான் மீண்டும் ரகசியமாகக் கட்டி எழுப்பி வருவதாகக் கூறி அதிர வைக்கும் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் சிஎன்என் (CNN) ஊடகம் மற்றும் சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ISIS) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் ஆய்வறிக்கை, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற உடன்படிக்கையுடன் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான சில நாட்களிலேயே இந்த கட்டுமானப் பணிகள் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வான்டோர் டெக்னாலஜிஸ் (Vantor Technologies) மற்றும் பிளானட் லேப்ஸ் நிறுவனங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாத தொடக்கத்தில் எடுத்த மிகத் துல்லியமான புகைப்படங்களின்படி, ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே அமைந்துள்ள பார்ச்சின் (Parchin) ராணுவ வளாகத்தில் தீவிர புனரமைப்புப் பணிகள் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ‘தலேகான் 2’ (Taleghan 2) என்ற நிலத்தடி மையத்தில் தான் அணு ஆயுதங்களுக்கான வெடிபொருட்கள் சோதிக்கப்பட்டு வந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன. வான்வழித் தாக்குதலின் போது இந்த மையத்தின் கூரையில் விழுந்த பெரும் துளைகளை ஜூன் மாதத்தில் தற்காலிகமாக மூடிய ஈரான், தற்பொழுது கனரக கிரேன்கள் மற்றும் இரும்பு வலைகளைக் கொண்டு நிரந்தரமாக கான்கிரீட் போட்டு மூடி, அதன் மேல் மண்ணைக் கொட்டி மறைக்க முயல்வது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, இஸ்ஃபஹான் நகருக்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) என்றழைக்கப்படும் பிகோலாங்-காஸ் லா மலைப்பகுதியிலும் ஈரான் தனது நிலத்தடி அணுசக்தி கட்டுமானங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், இந்த மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகளுக்குள் கனரக வாகனங்கள், சிமெண்ட் மிக்சர்கள் மற்றும் டிரம்பர்கள் தொடர்ந்து சென்று வருவது செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆழமான பகுதியில் அமைந்துள்ள இந்த சுரங்கத் தளம், அணுசக்தி செறிவூட்டலுக்குத் தேவையான அதிநவீன மையவிலக்குக் கருவிகளை (Centrifuges) தயாரிக்கும் முக்கிய மையமாக இருக்கலாம் என அணுசக்தி நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய முக்கிய அணுசக்தி மையங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போதைய ஈரானின் இந்த ரகசிய நடவடிக்கைகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் விதிகளை ஈரான் அப்பட்டமாக மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஈரானின் அணுசக்தி மையங்களை நேரடியாகக் கண்காணிக்கும் அறிவை இழந்துவிட்டதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கவலை தெரிவித்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆதாரங்களால் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *