அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றிக் கடந்த இரவு நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் தனது ‘புதிய ஆட்டத்தை’த் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகரக் காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தியதுடன், அதில் இரண்டு கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. MSC Francesca மற்றும் Epaminondas ஆகிய அந்த இரு கப்பல்களும் கடல்சார் விதிகளை மீறியதாகக் கூறி ஈரான் கடலோரப் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் ஈரானுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் அதிகாலையில் அரங்கேறியுள்ளது. ஈரானின் துப்பாக்கிப் படகுகள் (Gunboats) ஒரு சரக்குக் கப்பலை வழிமறித்து அதன் ‘பிரிட்ஜ்’ (Bridge) எனப்படும் கட்டுப்பாட்டு அறையை நோக்கி ராக்கெட்டுகள் மூலம் தாக்கியதில் கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது. மூன்றாவது கப்பலான ‘Euphoria’ தற்போது ஈரானியக் கரையை ஒட்டித் தரைதட்டி நிற்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பைக் குலைப்பது எங்களது சிவப்பு கோடு” என எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்குப் பதிலடியாகவே இதைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிபர் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீட்டித்தாலும், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை (Blockade) இன்னும் நீக்கப்படவில்லை. இதனைத் தீவிரமாக எதிர்க்கும் ஈரான், “தொடர்ந்து அச்சுறுத்தல்கள் நிலவும் வரை பாகிஸ்தானில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் செல்லவிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் பயணமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் தாக்குதல்கள் மற்றும் கப்பல்கள் சிறைபிடிப்பு காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் கடுமையாக உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் நெருங்கியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான 20% எண்ணெய் இந்த வழித்தடம் மூலமே செல்வதால், ஒருவேளை ஈரான் இந்த ஜலசந்தியை முழுமையாக மூடினால் உலகப் பொருளாதாரமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் அமெரிக்கா இதற்கு எத்தகைய ராணுவப் பதிலடி கொடுக்கும் என்பதை உலக நாடுகள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.