ஈரான் நாடு தனது இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த (IRGC) மூத்த தளபதிகள், ராணுவ ஆலோசகர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை-ட்ரோன் உபகரணங்களை ஏமன் நாட்டிலுள்ள ஹூதி அமைப்பினருக்கு இரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. செங்கடலில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு முட்டுக்கட்டை போடவும், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவுமே ஈரான் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘மஹான் ஏர்’ (Mahan Air) என்ற ஈரானிய விமானம் மூலம் சுமார் 10 முதல் 21 ஐஆர்ஜிசி அதிகாரிகள் மற்றும் ராணுவப் பொருட்கள் ஏமனுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தலைநகர் சனாவை நோக்கிச் சென்ற இந்த விமானம், அங்கு ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாகச் செங்கடல் பகுதியிலுள்ள ஹோடைடா (Hodeidah) துறைமுக நகருக்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக ஈரானிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
ஹூதி படையினருக்கு புதிய ஏவுகணை அமைப்புகளை இயக்கும் பயிற்சிகளை வழங்குவதற்காகவும், அவர்களின் தாக்குதல் திறனை அதிகரிக்கவுமே இந்த உயர்மட்டக் குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஹூதிகளின் போருக்கான நிதியை ஈடுசெய்யத் தங்கம் மற்றும் பணமும் இந்த விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் இந்த ராணுவ மற்றும் நிதி உதவியை அடுத்தே, சவுதி அரேபியா மற்றும் செங்கடலில் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு எதிராகப் புதிய கடற்படை முற்றுகையை ஹூதி அமைப்பு முறைப்படி அறிவித்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே உச்சக்கட்டப் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் இந்த நடவடிக்கை செங்கடல் பகுதியை மீண்டும் ஒரு ஆபத்தான போர்க்களமாக மாற்றியுள்ளது. இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 டாலரைக் கடந்து உயர்ந்துள்ள நிலையில், அமைதி வழியில் திரும்பாமல் ஹூதிகளை ஈரான் தனது கைபாவையாகப் பயன்படுத்தி பிராந்திய அமைதியைக் கெடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.