Posted in

கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதியின் பெற்றோருக்கு 25 ஆண்டுகள் உறைவிக்கப்பட்ட கருமுட்டை மூலம் ஆண் குழந்தை பிறப்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று நோவா இசை விழாவில் வைத்து ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த இஸ்ரேலிய பிணைக்கைதி அல்மோக் சாருசியின் (Almog Sarusi) பெற்றோர், 25 ஆண்டுகளுக்கு முன்பு உறைவிக்கப்பட்ட கருமுட்டை மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். அல்மோக்கின் தாயார் நிகா சாருசி (Nira Sarusi – 51) மற்றும் தந்தை யிகால் சாருசி (Yigal Sarusi) ஆகியோருக்கு இக்குழந்தை பிறந்துள்ளது.

மகன் அல்மோக் சாருசியை இழந்த துயரத்திலிருந்து மீண்டு வரவும், குடும்பத்தில் புதிய நம்பிக்கையை உருவாக்கவும் இத்தம்பதியினர் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். இதற்காக நிகா சாருசியின் 26 வயதில் சேகரிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக உறைவித்து வைக்கப்பட்டிருந்த (Frozen Egg) கருமுட்டையைப் பயன்படுத்தி, செயற்கை கருத்தரிப்பு (IVF) முறையில் இக்குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தையின் பிறப்பு குறித்துத் தாய் நிகா சாருசி தெரிவிக்கையில், தங்களின் மகன் அல்மோக் சாருசியின் நினைவாகவும், தங்கள் குடும்பத்தின் தொடர்ச்சியாகவும் இக்குழந்தை பிறந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் இஸ்ரேல் நாட்டில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதோடு, மகனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆறுதலாக அமைந்துள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.

தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகப் மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் புதிய குழந்தைக்கு அல்மோக்கின் நினைவைப் போற்றும் வகையில் பெயரிடப் போவதாகவும் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.