1992 முதல் 1996 வரை நடைபெற்ற போஸ்னியப் போரின் போது, சரஜெவோ நகரம் உலகின் மிக நீண்ட மற்றும் கொடூரமான முற்றுகையை எதிர்கொண்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, பணக்கார வெளிநாட்டினர் அங்குள்ள பொதுமக்களை பொழுதுபோக்கிற்காகச் சுட்டுக் கொல்லும் ‘மனித சஃபாரி’ (Human Safari) அல்லது ‘ஸ்னைப்பர் சுற்றுலா’ என்ற கொடூரமான விளையாட்டு நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ட்ரிஸ்டே நகரிலிருந்து பெல்கிரேடுக்கு விமானம் மூலம் பயணிக்கும் இந்த பணக்காரர்கள், அங்கிருந்து போஸ்னிய செர்பியப் படையினரின் உதவியோடு மலைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அப்பாவி மக்களை வேட்டையாட அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் விவகாரம் தொடர்பாக இத்தாலியின் மிலன் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு எழுத்தாளர் எசியோ காவஸ்ஸேனி அளித்த 17 பக்க புகாரின் அடிப்படையிலும், ‘சரஜெவோ சஃபாரி’ என்ற ஆவணப்படத்தின் ஆதாரங்களின்படியும் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்கியதற்காக, மிலன் நீதிமன்றம் தற்போது இத்தாலியைச் சேர்ந்த பல முக்கிய நபர்களைச் சந்தேகத்தின் பேரில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்த மனித வேட்டை விளையாட்டிற்குப் போஸ்னிய செர்பியப் படையினர் மிக அதிக அளவில் கட்டணம் வசூலித்ததாகத் தற்போதைய புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வார இறுதி நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு, தற்போதைய மதிப்பில் சுமார் 80,000 யூரோ முதல் 1,00,000 யூரோ (சுமார் 90 லட்சம் முதல் 1.1 கோடி ரூபாய் வரை) வரை பணக்கார சுற்றுலாப் பயணிகள் கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். இந்த கொடூரத்தின் உச்சமாக, குறிவைக்கப்படும் நபர் ஒரு குழந்தையாக இருந்தால், அதற்கான கட்டண விகிதம் இன்னும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன.
இத்தாலிய சட்டப்படி, இந்த கொடூரமான குற்றத்திற்கு ‘கொடூரமான மற்றும் வஞ்சகமான நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட கொலை’ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இந்தக் குற்றங்களுக்குக் கால வரம்பு ஏதும் இல்லை என்பதால், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் இத்தாலியப் புலனாய்வு அமைப்பு முதல் நபரை முறைப்படி விசாரணைக்கு அழைத்துள்ளது, போஸ்னியப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.