Posted in

இத்தாலியில் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒயின் திருட்டு: ரூ. 52 கோடி மதிப்பிலான 30,000 பாட்டில்கள் கொள்ளை

இத்தாலியின் டஸ்கனி பிராந்தியத்தில் இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மார்கேசி அன்டினோரி’ (Marchesi Antinori) நிறுவனத்தின் கிடங்கில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்து 30,000 பிரீமியம் ரக ஒயின் பாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர். இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 5 மில்லியன் யூரோக்கள் (சுமார் 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் / இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலிய வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய ஒயின் கொள்ளைச் சம்பவமாக இது கருதப்படுகிறது.

குறைந்தது 7 பேரைக் கொண்ட கொள்ளையர் கும்பல், வார இறுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களைச் செயலிழக்கச் செய்து இக்களவாட்டில் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் ஃபோர்க்லிஃப்ட் வாகனங்களைப் பயன்படுத்தி திங்னனெல்லோ, சோலாயா மற்றும் குவாடோ அல் டாஸோ ஆகிய உயர் மதிப்புடைய ரெட் ஒயின் பாட்டில்களை இரு பெரிய டிரக்குகளில் ஏற்றித் தப்பியோடியுள்ளனர். திங்கள்கிழமை காலை ஊழியர்கள் பணிக்கு வந்தபோதே இந்தக் கொள்ளை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1385-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்கேசி அன்டினோரி நிறுவனம் சர்வதேச அளவில் 170 நாடுகளுக்கு ஒயின் ஏற்றுமதி செய்து வருகிறது. இவ்வளவு பெருந்தொகையிலான பாட்டில்களைச் சர்வதேசச் சந்தையில் ரகசியமாக விற்பனை செய்வது கடினம் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரென்ஸோ கோட்டரெல்லா தெரிவித்துள்ளார். தொழில்முறை திருடர்களே திட்டமிட்டு உள்விவரங்களுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இத்தாலியக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து டிரக்குகளின் தடங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.