சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், நடுக்கடலில் ஏற்பட்ட ‘முரசு’ புயல் மற்றும் படகின் இன்ஜின் பழுது காரணமாகக் கடலில் விபத்துக்குள்ளாகினர். இதில் உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மீனவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கனிமொழி தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்தகைய பெரிய துயரம் நிகழ்ந்த பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்திலும் அலட்சியமாகச் செயல்பட்ட அரசு இத்துயரத்திற்கு உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 7 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிவாரணத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் மாயமான எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.