Posted in

அங்கிருந்து ஓடிப்போனது யார் என்று மக்களுக்குத் தெரியும்! கரூரில் வெடித்த முதல்வர் விஜய்.. தூத்துக்குடியில் கனிமொழி அதிரடி பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கரூர்ப் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விபத்திற்குப் பின்னணியில் அப்போதைய காவல்துறையின் ‘நாடகம்’ மற்றும் திமுகவின் அரசியல் சதி இருந்ததாகத் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் இன்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். முதல்வரின் இந்த அதிரடிப் பேச்சுக்குத் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, அடுக்கடுக்கான பதிலடிகளைக் கொடுத்துள்ளார். இதனால் தவெக – திமுக இடையேயான வார்த்தைப்போர் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் விஜய்யின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய கனிமொழி, “விசாரணையில் இருக்கும் ஒரு துயரச் சம்பவம் பற்றிப் பொறுப்புணர்வுடன் பேசுவதே நல்லது. ஆனால், அன்று கரூரில் விபத்து நடந்த போது மக்களோடு களத்தில் நின்று அவர்களுக்கு உதவியவர்கள் யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து துயரைத் துடைத்தவர்கள் யார்? அதே நேரத்தில், அந்தச் சம்பவத்தின் போது தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து தப்பித்து ஓடிப்போனது யார்? என்பது கரூர் மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்றாகவே தெரியும்” என்று மிக ஆவேசமாகச் சாடினார்.

தொடர்ந்து தவெக ஆட்சியை விமர்சித்த கனிமொழி, தற்போதைய ஆட்சியில் உள்ள முதலமைச்சரும், அமைச்சர்களும் எங்குச் செல்ல வேண்டுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதை விடுத்து, தேவையற்ற இடங்களுக்குச் சென்று மக்களுக்குச் சிக்கல்களை உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் அளவிற்கு இந்த தவெக அரசு செயல்பட்டு வருவதாகவும், தனிதனிப் பொறுப்புகள் உள்ளதை மறந்துவிட்டு இந்த ஆட்சி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

இதே விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜியும் எக்ஸ் (X) தளத்தில் முதல்வர் விஜய்க்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “அன்று விபத்து நேரிட்டு மக்கள் மயங்கி விழுந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார்? செய்தியாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்துச் சென்னைக்கு ஓடியது யார்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரைக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே திமுகவின் முக்கியத் தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் சூறாவளியைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *