கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே உள்ள பனவூர் பகுதியில், ஒன்றரை வயது பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று வளர்ப்புத் தந்தையால் கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயான அகிலாவின் (24) காதலனும், குழந்தைக்கு வளர்ப்புத் தந்தையாக இருந்தவருமான அஷ்கர் (31) என்பவரை நெடுமங்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையின் பெயர் அர்ஷித் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணி குறித்துப் பார்த்தால், அகிலாவின் முதல் கணவர் அகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு, அஷ்கர் என்பவருடன் அகிலாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை அர்ஷித்திற்குத் திடீரென உடல்நலக் குறைவு மற்றும் வாந்தி ஏற்பட்டதாகக் கூறி அஷ்கர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (SAT Hospital) உடலை அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடற்கூராய்வு (Autopsy) அறிக்கையில் வெளியான தகவல்கள் அதிகாரிகளையே உறைந்து போகச் செய்துள்ளன. பச்சிளம் குழந்தையின் உடல் முழுவதும் புதிய காயங்கள், பழைய தழும்புகள் என மொத்தம் 51-க்கும் மேற்பட்ட சித்ரவதை அடையாளங்கள் கண்டறியப்பட்டன. குழந்தையின் இரு கைகளும் மிகக் கொடூரமாக மிதிக்கப்பட்டு உடைக்கப்பட்டிருந்ததும், குழந்தையின் பாதங்களில் சூடு வைக்கப்பட்டிருந்ததும் அம்பலமானது. குழந்தை உணவு சாப்பிட்டவுடன் அஷ்கர் மிகக் கொடூரமாக வயிற்றுப் பகுதியில் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கு நேரடிக் காரணம் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அஷ்கரைச் சம்பவ இடத்திற்குத் சாட்சியங்கள் சேகரிக்க அழைத்து வந்த போது, ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் பொதுமக்கள் போலீஸ் வளையத்தை உடைத்துக் கொண்டு அஷ்கரைத் தர்ம அடி வெளுத்தனர். மேலும், கொலையாளிக்குத் துணையாக இருந்ததாகக் கூறி குழந்தையின் தாய் அகிலாவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பின்புறம் குழந்தையின் இரத்தக் கறை படிந்த ஆடைகள் மற்றும் ஆவணங்களை அஷ்கர் எரித்துச் சாம்பலாக்கியதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.