Posted in

வடகொரியாவில் ட்ரோன் கண்காட்சி: தொழில்நுட்பத்தை மேம்படுத்த கிம் ஜாங் உன் உத்தரவு!

வடகொரியத் தலைவரான கிம் ஜாங் உன், “ஆளில்லா வான்வழித் தொழில்நுட்ப மேம்பாடு-2026” (Unmanned Aerial Technology Development-2026) என்ற பெயரில் தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற சர்வதேச ஆயுத மற்றும் ட்ரோன் கண்காட்சியைப் பார்வையிட்டார். கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிகழ்வில் பல்வேறு வகையான தாக்குதல் மற்றும் உளவுப் பயன்பாட்டிற்கான ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ராணுவ பலத்தின் மூலம் மட்டுமே உண்மையான அமைதியை உறுதி செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ட்ரோன் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை வேகமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தற்போது நடைபெற்று வரும் நவீனப் போர்களில் ட்ரோன்களின் பங்கு மிக முக்கியமானது என்பதால், வடகொரியா ஆளில்லா விமான அமைப்புகளில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது. ராணுவத் தேவைகளுக்கு ஏற்ப அதிநவீன ட்ரோன்களை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளை முடுக்கிவிட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பிராந்திய பாதுகாப்பில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என கிம் ஜாங் உன் சுட்டிக்காட்டினார்.

கிம் ஜாங் உன்னின் இந்த நடவடிக்கை தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் தொடர்ச்சியான ஆயுதக் காட்சிப்படுத்துதல்களும் ராணுவ நவீனமயமாக்கல் முயற்சிகளும் கொரிய தீபகற்ப பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனக் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது புதிய ட்ரோன் மாடல்களின் சோதனை ஓட்டங்கள் மற்றும் உற்பத்திக் திட்டங்களை வடகொரிய ராணுவம் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகிறது.

இந்தக் கண்காட்சியைத் தொடர்ந்து வடகொரியாவின் அடுத்தகட்ட ராணுவப் பயிற்சிகள் மற்றும் ஆயுதச் சோதனைகள் குறித்த விவரங்களைச் சர்வதேச நிறுவனங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.