தமிழக முதல்வர் விஜய் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்போயணத்தின் போது, புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படும் விராலிமலை மற்றும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களை எதிர்நோக்கி இந்த மாவட்டப் பயணம் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காலியாக உள்ள தொகுதிகளில் கட்சியின் பலத்தை ஆய்வு செய்யவும், பொதுமக்களின் மனநிலையை நேரடியாக அறிந்து கொள்ளவும் இந்தத் பயணம் உதவும் எனக் கருதப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் விஜய்யின் இந்தப் பயணத்தின் போது பிரம்மாண்டமான ரோடு ஷோ (Roadshow) நடத்துவதற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்புகளையும் இந்தப் பயணம் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் மாவட்ட வாரியாகத் தலைவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பயணங்கள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொடர்ந்து, ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் முதல்வர் விஜய் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ இறுதி அட்டவணை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.