ருமேனியாவின் குடியிருப்பு கட்டிடம் மீது வெடிகுண்டுகள் தாங்கிய ‘கெரான்-2’ (Geran-2) ரக ட்ரோன் விழுந்து வெடித்த சம்பவத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கஜகஸ்தான் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள புதின், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது, “ருமேனியாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, அதுகுறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது” என்று முதலில் முரண்பட்ட அவர், பின்னர் இந்தத் தாக்குதலுக்கும் ரஷ்யாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் (Kremlin) நிர்வாகம், ரஷ்யா ஒருபோதும் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்றும், தங்களை நோக்கி நேட்டோ படைகள் அத்துமீற முயன்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. “எல்லைகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்த உடனே ‘ரஷ்யர்கள் வருகிறார்கள், ரஷ்யா தாக்குகிறது’ என்று ஐரோப்பாவில் மொத்தமாகப் பதற்றமடைவது (Total panic) வாடிக்கையாகிவிட்டது” என்று புதின் சாடியுள்ளார். கடந்த சில வாரங்களாக உக்ரைனின் ட்ரோன்கள் வழிதவறி பின்லாந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்குள் விழுந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ருமேனியாவில் விழுந்ததும் உக்ரைனின் ட்ரோனாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
இருப்பினும், ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சரான ராடு-டினெல் மிரூடா (Radu-Dinel Miruta) புதினின் இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். “குடியிருப்பு கட்டிடத்தின் கூரையில் விழுந்து வெடித்த ட்ரோனின் பாகங்களில் உள்ள வரிசை எண்களை (Serial numbers) நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம்; அது சந்தேகத்திற்கு இடமின்றி ரஷ்ய தயாரிப்புதான்” என்று அவர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆதாரங்களை நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு ரஷ்ய அதிகாரிகளுக்கே அவர் சவால் விடுத்துள்ளார். ருமேனியா ஏற்கனவே இந்த விவகாரத்தில் தனது நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதால் இருநாட்டு உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
மறுபுறம், நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ருமேனியாவிற்குத் தங்களின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். “ரஷ்யாவின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணிக்கும் விடுக்கப்பட்ட சவால்” என்று கூறிய அவர், நேட்டோ எல்லைகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க தங்களின் வான்பாதுகாப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புப் படைகளை ருமேனியாவில் உடனடியாகக் குவிக்க உத்தரவிட்டுள்ளார். புதினின் மறுப்பும், நேட்டோவின் இந்த அச்சுறுத்தலும் கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு நேரடி மோதல் வெடிக்கலாம் என்ற போர்ப் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.