அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்றும், அதில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தகுதிநீக்க மனுக்கள் நிலுவையில் இருந்தபோது அவசர அவசரமாக ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது செல்லாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், தானாக முன்வந்து பதவி விலகிய உறுப்பினரின் முடிவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதில் எந்தவித விதிமீறலும் இல்லை என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ராஜினாமா மற்றும் தகுதிநீக்கம் ஆகிய இரண்டும் அரசியல் சாசனப் பிரிவுகளின் கீழ் தனித்தனியான நடைமுறைகள் என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 6 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி காலியிட அறிவிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தகுதிநீக்கம் தொடர்பான மனுக்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் சபாநாயகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.