Posted in

லஞ்சத்தை ஒழிக்க அரசு ஊழியர்களின் பண வரம்பிற்கு செக்: மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிரடி யோசனை!

அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களைக் கட்டுப்படுத்தவும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தங்களிடம் வைத்திருக்கக் கூடிய ரொக்கப் பணத்திற்குப் பொதுவான வரம்பை நிர்ணயம் செய்வது குறித்துத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், பண வரம்பை நிர்ணயிப்பது லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகளுக்கும், வெளிப்படையான நிர்வாகத்திற்கும் பெரிதும் உதவும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராகப் பணியாற்றிய கலா என்பவர், கடந்த 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 45,000 பணம் வைத்திருந்ததாகத் துறை ரீதியான நடவடிக்கை எதிர்கொண்டார். தனது திருமணச் செலவுக்காக வைத்திருந்த சொந்தப் பணம் அது எனக் கூறி, தன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி B. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, பதிவுத்துறையில் பணியாளர்களின் பண வரம்பு குறித்துச் சுற்றறிக்கை இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலத்தின் அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய பொதுவான அரசாணையோ அல்லது வழிகாட்டல்களோ தற்போது இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, பதிவுத்துறையின் சுற்றறிக்கை மட்டுமே போதுமானது அல்ல என்று தெரிவித்தார். மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் இது குறித்துப் பொதுவான விதிமுறைகளை உருவாக்குவது சாத்தியமா என்பது பற்றிப் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரசு அலுவலகங்களில் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்ட சூழலில், ஊழியர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கு அலுவலகத்திற்கு எடுத்து வரும் ரொக்கப் பணத்திற்குத் தெளிவான எல்லைக்கோடு வகுக்கப்பட வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார். இத்தகைய கட்டுப்பாடுகளும், பதிவேடு பராமரிப்புகளும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான தற்காப்பு அரணாக அமையும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.