சாதிய பாகுபாடு புகார் மீது 19 நாட்கள் தாமதமாக வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துவிஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், தங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் பொதுப்பாதையை மாற்று சமூகத்தினர் மறித்துச் சாதிய பாகுபாடு காட்டுவதாகப் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக எம். இருளாண்டி என்பவர் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதியே அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகிய பிறகே, 19 நாட்கள் கழித்து செப்டம்பர் 21-ஆம் தேதி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளனர்.
புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யத் தவறிய அபிராமம் காவல் ஆய்வாளர் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு (SP) நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தற்போதைய காவல்துறை அதிகாரியின் விசாரணை நியாயமாகவும் நடுநிலையாகவும் நடைபெறவில்லை எனக் கூறி அந்த விசாரணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதற்காக நடுநிலையான புதிய துணைக் காவல் கண்காணிப்பாளரை (DSP) நியமிக்கத் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய விசாரணை அதிகாரி இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், காவல் ஆய்வாளர் மீதான நடவடிக்கை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை 2027 ஜனவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.