Posted in

5 இத்தாலிய வீரர்கள் பலியான கொடூர சுரங்கம்; மீட்புக்குழு வெளியிட்ட முதல் உள்நாட்டுப் படங்கள்!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகக் கருதப்படும் மாலைத்தீவின் வாவு அட்டோல் (Vaavu Atoll) கடல் பகுதியில், கடந்த வாரம் 5 இத்தாலிய ஸ்கூபா டைவிங் வீரர்கள் நீருக்கடியில் உள்ள ஒரு அபாயகரமான குகையை ஆய்வு செய்யச் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தனர். மாலைத்தீவு வரலாற்றிலேயே மிக மோசமான இந்த டைவிங் விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கடலுக்கு அடியில் சுமார் 60 மீட்டர் (195 அடி) ஆழத்தில் உள்ள அந்த ‘மரண குகையின்’ உட்பகுதியைத் துல்லியமாகக் காட்டும் முதல் பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆவணங்களை மீட்புக் குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த குகை ஆராய்ச்சி மற்றும் மீட்பு நிபுணர்கள் (DAN Europe) அடங்கிய குழுவினர், மாலத்தீவு ராணுவம் மற்றும் போலீசாருடன் இணைந்து பல நாட்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி இந்த உடல்களை மீட்டனர். அப்போது குகையின் ஆபத்தான அமைப்பை ஆவணப்படுத்த அவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறுகிய பாறை இடுக்குகள், வெளிச்சமே இல்லாத அடர்ந்த இருள் சூழ்ந்த பாதைகள் மற்றும் மனிதர்கள் எளிதில் திசைமாறக் கூடிய சிக்கலான சுரங்க வழித்தடங்கள் அந்தப் புகைப்படங்களில் அச்சுறுத்தும் வகையில் காட்சியளிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டிஃபால்கோன், அவரது மகள் ஜியோர்ஜியா, மற்றும் இரண்டு கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் அந்த பிரம்மாண்ட குகை அமைப்பின் மூன்றாவது மற்றும் மிக ஆழமான உட்பகுதியில், ஒரு குறுகிய முட்டுச்சந்தான (Dead-end) சுரங்கப் பாதையில் ஒன்றாகச் சிக்கி உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் குகையை விட்டு வெளியேற முயன்ற போது, கடுமையான நீரோட்டத்தின் காரணமாகத் தவறான வழியைத் தேர்ந்தெடுத்து, ஆக்ஸிஜன் தீர்ந்துபோய் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று மீட்புக் குழுவின் தலைவர் மரோனி தெரிவித்துள்ளார்.

இந்த மீட்புப் பணியின் போது மாலைத்தீவு ராணுவத்தைச் சேர்ந்த உள்ளூர் வீரர் ஒருவரும் அழுத்தக் கோளாறு (Decompression illness) காரணமாக வீர மரணமடைந்தது சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது. மாலைத்தீவு சட்டப்படி பொழுதுபோக்கு டைவிங் செய்ய 30 மீட்டர் மட்டுமே அனுமதி உள்ள நிலையில், இந்த குழுவினர் 60 மீட்டர் ஆழம் வரை செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து மாலைத்தீவு மற்றும் இத்தாலிய அரசு அதிகாரிகள் தற்போது ‘அலட்சியக் கொலை’ (Culpable homicide) பிரிவின் கீழ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நீருக்கடியிலான கேமரா பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளன.