தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தமது பேச்சு மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனக்கு அளித்த அறிவுரைகள் குறித்துச் சட்டப்பேரவையில் விளக்கமளித்துப் பேசியுள்ளார்.
முன்னதாகக் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், சட்டமன்றத்தில் முதலமைச்சரைச் சந்திப்பது குறித்துத் தூத்துக்குடி வட்டார வழக்கிலான ஆவேச மொழியில் சில கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். இக்கூற்றுக்கு எதிராகத் தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின் தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார்.
சட்டமன்றத்தில் இது தொடர்பான விவாதம் எழுந்தபோது பேசிய மார்க்கண்டேயன், இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னிடம் கூறிய வார்த்தைகளை விவரித்தார். “முதலமைச்சர் எதைப் பேசியிருந்தாலும் கூட, ஒரு மக்கள் பிரதிநிதியாக நீங்கள் முதல்வரை இவ்வளவு கடினமான வார்த்தைகளால் பேசியிருக்கக் கூடாது என்று தலைவர் மு.க. ஸ்டாலின் என்னிடம் சுட்டிக்காட்டி அறிவுறுத்தினார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கரிசல் மண் பகுதியின் வட்டார வழக்கின் காரணமாக உணர்ச்சிவசப்பட்டுத் தான் பேசிய அந்தச் சொற்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். சட்டமன்ற மாண்பைக் காக்கும் வகையில், சபாநாயகரும் உறுப்பினர்களும் அருள் கூர்ந்து அந்த வார்த்தைகளை மறந்து விடுமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிலவிய சலசலப்பு தணிந்தது.