இங்கிலாந்தின் மிடில்ஸ்புரோ (Middlesbrough) பகுதியில் A66 நெடுஞ்சாலையில் நடைபெற்ற பயங்கரக் கார் விபத்தில் இரு காவல் துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் பலியான சம்பவம், இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியே என்ற திடுக்கிடும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பலியான 17 வயதான கோல் வர்த்தி (Cole Worthy) என்பவரின் தந்தையின் வீட்டை மர்மக் கும்பல் வாகனத்தால் மோதிச் சேதப்படுத்தியதே இந்தத் தொடர் வன்முறைக்கும் 7 உயிர்கள் பலியானதற்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில், கோல் வர்த்தியின் தந்தையின் வீட்டின் மீது மற்றொரு வாகனம் வேண்டுமென்றே இருமுறை மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கோல் வர்த்தி மற்றும் அவரது 4 நண்பர்கள், தங்களது ஃபோக்ஸ்வேகன் பாசாட் (VW Passat) காரில் தப்பிச் சென்ற அந்த கும்பலின் காரைத் துரத்திச் சென்றுள்ளனர். இவர்களது கார் அதிவேகமாகச் செல்வதைக் கண்ட காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் துரத்தத் தொடங்கியுள்ளனர்.
காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக, இளைஞர்கள் ஓட்டிச் சென்ற கார் A66 இரட்டை வழிச்சாலையில் தவறான திசையில் (Wrong-way) அதிவேகமாகப் பாய்ந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கிளீவ்லேண்ட் காவல் துறையின் ஆயுதம் ஏந்திய ரோந்து வாகனம் (Armed Response Vehicle) மீது இவர்களது கார் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 இளைஞர்களும், ரோந்து வாகனத்தில் இருந்த அதிகாரிகள் மேத்யூ பிளேட்ஸ் மற்றும் டாம் கிளாஃப் ஆகிய இரு போலிஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மிடில்ஸ்புரோ பகுதியில் வன்முறை பரவாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகச் சதித் திட்டம் தீட்டியது, கொலை அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் குற்றவாளிகளுக்கு உதவியது போன்ற பிரிவுகளின் கீழ் இதுவரை 17-க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் மீது வாகனம் மோதிய சிறிய மோதல், 7 பேரின் உயிரைப் பறித்த பெரும் சோகமாக மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.