Posted in

மூஞ்சிய பாரு.. பல்ல பாருனு கிண்டல் பண்ணாங்க: உருவக் கேலிகளுக்கு எதிராக அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!

சமூக வலைதளங்களில் தன் மீது தொடுக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட உருவக் கேலிகள் (Body Shaming) குறித்துத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் விருதை மகள் கீர்த்தனா தனது மனவேதனையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில் அவர் நடத்திய ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சை எழுந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆய்வின் போது அரசுப் பள்ளி மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதை மையமாக வைத்து, எதிர்க்கட்சியினரும் சில சமூக வலைதளப் பயனர்களும்தன்னைக் கடுமையாகக் விமர்சித்ததாக அவர் கூறினார். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை விடுத்து, தனது முகம், பற்கள் மற்றும் தோற்றத்தைக் குறிப்பிட்டு மிகக் கீழ்த்தரமாக உருவக் கேலி செய்ததாக அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

நான் ஒரு சாதாரண அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, எளிய பின்னணியில் இருந்து இந்த நிலைக்கு உயர்ந்து வந்துள்ளேன் எனக் குறிப்பிட்ட அவர், “என்னுடைய ஆங்கில உச்சரிப்பையோ அல்லது எனது தோற்றத்தையோ கிண்டல் செய்பவர்கள், உண்மையில் என்னை மட்டும் கேலி செய்யவில்லை; அரசுப் பள்ளிகளில் படித்து நம்பிக்கை வளர்த்து வரும் லட்சக்கணக்கான கிராமப்புறக் குழந்தைகளின் தன்னம்பிக்கையையே சிதைக்க முயல்கிறார்கள்” என அதிரடியாகப் பதிலடி கொடுத்தார்.

அரசியலில் கொள்கை ரீதியாகவும், செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறப்பும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, ஒரு பெண்ணின் தோற்றத்தையும் உடையையும் வைத்து கீழ்த்தரமாகத் தாக்கிப் பேசுவது நாகரிகமான சமூகத்திற்கு அழகல்ல என்றும் சாடினார். அமைச்சரின் இந்த உருக்கமான விளக்கம் மற்றும் அதிரடிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.