தமிழகச் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், சென்னை நகருக்குள் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் எனத் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நகரின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகத்தை சென்னைக்கு வெளியே திருமழிசை போன்ற நகர்ப்புறச் எல்லைப் பகுதியில் அமைக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி ஆர்.கண்ணன் முக்கிய யோசனையை முன்வைத்துள்ளார்.
தற்போதுள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சட்டப்பேரவைக்கு வெறும் 2.07 லட்சம் சதுர அடியும், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 3.75 லட்சம் சதுர அடியும் மட்டுமே இடவசதி உள்ளது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு அங்குப் போதிய இடமில்லாமல் கடும் நெரிசல் நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே அனைத்துத் துறைகளையும் ஒரே வளாகத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆர்.கண்ணன், இத்திட்டம் அவரது தொலைநோக்கு அடையாளமாக (Legacy) அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், புதிய தலைமைச் செயலகத்திற்கு கிண்டியில் 35 ஏக்கர், பட்டினம்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கத்தில் தலா 20 ஏக்கர் நிலங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் இவ்வளவு பெரிய வளாகத்தைக் கட்டுவது எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். பிரேசில் நாடு தனது தலைநகரை ரியோ டி ஜெனிரோவில் இருந்து பிரேசிலியாவிற்கு மாற்றிய உதாரணத்தைச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா முன்னாள் அதிகாரி கண்ணன், சென்னை நகருக்கு வெளியே பரவலான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் திருமழிசை போன்ற வெளிப்புறப் பகுதிகளில் தலைமைச் செயலகத்தை அமைப்பதே பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
1978-ஆம் ஆண்டு நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டப்பட்டபோது தமிழகத்தின் மக்கள் தொகை 4 கோடியாக இருந்தது; ஆனால் தற்போது 8 கோடியைத் தாண்டிவிட்ட சூழலில், அடுத்த 100 ஆண்டுகளின் நிர்வாகத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய தலைமைச் செயலகம் காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் தனது ஆட்சியின் முக்கிய சாதனையாகவும் அடையாளமாகவும் இத்திட்டத்தைக் கொண்டுவரத் தீவிரமடி காட்டி வரும் நிலையில், புதிய வளாகத்திற்கான இடத்தை இறுதி செய்வதில் சென்னைக்கு வெளியே அமைக்கும் யோசனையும் தவெக அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.