லண்டனின் ஒரு நள்ளிரவுப் பொழுது… யாருமே எதிர்பாராத வண்ணம் அரங்கேறிய அந்த ஒரு வார்த்தை மோதல், இன்று பிரிட்டன் நீதிமன்றத்தின் கூண்டில் வந்து நின்று ஒட்டுமொத்த சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது! பிபிசி (BBC Radio 5 Live) வானொலியின் முன்னாள் முன்னணி அறிவிப்பாளரும், ஈழத்துத் தமிழ் மற்றும் இலங்கைப் பின்னணியைக் (Sri Lankan descent) கொண்டவருமான நிஹால் அர்த்தநாயக்க (55) என்பவருக்கு எதிராக வீசப்பட்ட மிகக் கொடூரமான இனவெறி வார்த்தைகள், தற்போது லண்டன் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கிரேட்டர் மான்செஸ்டரின் ஆல்ட்ரின்காமில் உள்ள ஒரு மதுவகத்திற்கு வெளியே இந்த நடுக்காட்சி அரங்கேறியது. அப்போது அங்கே குடிபோதையில் தள்ளாடியபடி வந்த 60 வயதான கிரஹாம் குரோவ்ஸ் என்ற நபர், நிஹால் அர்த்தநாயக்கவுடன் பேசத் தொடங்கியுள்ளார். ஆனால், அந்தப் பேச்சு அடுத்த சில நிமிடங்களிலேயே வன்மமாக மாறி, யாரும் பொதுவெளியில் உச்சரிக்க அஞ்சும் மிகக் கேவலமான, ஆபாசமான இனவெறிச் சொற்களை நிஹால் மீது அந்த முதியவர் அள்ளி வீசியுள்ளார்.
பிரிட்டனில் மிகக் கடுமையான சட்டங்கள் இருந்தாலும், ஒரு பெரும் ஊடகப் பிரபலத்தை, அதுவும் இலங்கைப் பூர்வீகத்தைக் கொண்ட ஒருவரைப் பார்த்துப் பொதுவெளியில் இப்படி இனவெறியைத் தூண்டும்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு மான்செஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இம்ரான் ஷாஃபி, “நாம் வாழும் தற்போதைய காலகட்டத்தில் சமூகத்தைப் பிரிக்க நினைக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த மனிதர்களுக்கு மத்தியில், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் மிகக் ஆபத்தானவை” என்று எச்சரித்து, அந்த முதியவருக்கு 400 பவுண்டுகள் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
ஆண்டுக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் பல கோடிகள்) சம்பளம் வாங்கும் தனது பிபிசி வேலையை, அங்கே நிலவும் ஒருதலைப்பட்சமான சூழல் தன் மனநலத்தைப் பாதிப்பதாகக் கூறி நிஹால் அர்த்தநாயக்க ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் பிறந்து வளர்ந்தாலும், இலங்கையைச் சேர்ந்த பௌத்த பெற்றோரின் மகனாக, ஒரு பெருமைமிக்க பிரிட்டிஷ் ஸ்ரீலங்கனாக (British Sri Lankan) சர்வதேச அளவில் அறியப்படும் நிஹாலுக்கு நடந்த இந்தச் சம்பவம், மேலைநாடுகளில் ஆசியர்களுக்கு எதிராக மறைந்திருக்கும் இனவெறியின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.