வட கொரியா செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏவுகணையின் பறக்கும் பாதையை மாற்றியமைக்கும் வசதி கொண்ட புதிய இடைநிலை மூலோபாய ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது மகள் ஜூ ஏ மற்றும் மனைவி ரி சோல் ஜூ ஆகியோருடன் நேரில் சென்று இந்த ஏவுகணைப் பயிற்சியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வட கொரியாவின் கிழக்குக் கடலோர நகரமான வொன்சான் (Wonsan) பகுதியில் இருந்து அக்டோபர் 3-ஆம் தேதி அதிகாலை ஏவப்பட்ட இந்த ஏவுகணை, சுமார் 700 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கியதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. குறைந்த உயரத்தில் பறக்கும் போது தனது பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட இந்த ஏவுகணையைத் எதிரிகளால் கண்டறிந்து தப்பிப்பது இயலாத காரியம் என அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் முக்கிய அதிகாரியுமான கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.
ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தங்களின் மூலோபாயத் தாக்குதல் அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் அழிவுத் திறனையும் எதிரிகள் உணரும் வகையில் ராணுவ பலத்தை இடைவிடாமல் பெருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வட கொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனை தங்களது படைகளுக்கோ அல்லது கூட்டாளி நாடுகளுக்கோ உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என அமெரிக்க பசிபிக் கட்டளையகம் மதிப்பீடு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பலகட்டத் தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தொடர்ந்து அணுஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பிராந்தியப் பாதுகாப்பைக் கண்காணித்து வரும் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவங்கள், வட கொரியாவின் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நகர்வுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.