Posted in

அட்லாண்டிக் கடலில் காணாமல் போன மருத்துவ விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு: 6 பேரைக் தேடும் பணி தீவிர தீவிரமடைந்தது!

கனடாவைச் சேர்ந்த ‘லேடிட்யூட் ஏர் ஆம்புலன்ஸ்’ (Latitude Air Ambulance) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி100’ (Gulfstream G100) ரக மருத்துவ விமானம், பெர்முடாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது அட்லாண்டிக் கடலில் மாயமானது. மாசசூசெட்ஸ் மாகாணத்தின் நன்டக்கெட் தீவு (Nantucket Island) அருகே கடலில் சிதைந்த நிலையில் கிடந்த விமானத்தின் பாகங்களை அமெரிக்கக் கடலோரக் காவல் படையினர் (US Coast Guard) கண்டறிந்துள்ளனர்.

இந்த மருத்துவ விமானத்தில் இரண்டு விமானிகள், இரண்டு மருத்துவ ஊழியர்கள், ஒரு நோயாளி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் என மொத்தம் 6 பேர் பயணித்தனர். கடலோரக் காவல் படையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, பயணித்தவர்களில் 4 பேர் கனடா நாட்டவர்கள் என்றும், 2 பேர் பெர்முடா நாட்டவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 24,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்துக் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் தனது இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளதோடு, மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். லேடிட்யூட் ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிளாரன்ஸ் டோகரெட்ஸ் கூறுகையில், அவசர சிகிச்சைக்காக நோயாளியைக் கொண்டு செல்லும் பணியில் விமானம் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கக் கடலோரக் காவல் படையின் கப்பல்கள் மற்றும் ரோந்து ஹெலிகாப்டர்கள் மூலம் விமானத்தில் பயணித்த 6 பேரையும் தேடும் பணிகள் அட்லாண்டிக் கடற்பகுதியில் இரவோடு இரவாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடலில் மிதக்கும் எச்சங்களை மீட்கும் பணிகளும், விபத்தின் காரணத்தைக் கண்டறியும் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.