Posted in

அமெரிக்கா- வடகொரியா பேச்சுவார்த்தை: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தகவல்!

வடகொரியா தற்போது அமெரிக்கா அல்லது தென்கொரியா ஆகிய நாடுகளுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தத் தயாராக இல்லை என்றும், அதற்குப் பதிலாகத் தனது சொந்தப் பொருளாதாரத் தற்சார்பு மற்றும் ராணுவப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனா, வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு சியோல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்குக்குப் பிறகு முதன்முறையாக வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு (Pyongyang) மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விவியன் பாலகிருஷ்ணன் பயணம் மேற்கொண்டார். வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன்-ஹுய் (Choe Son Hui) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜோ யோங் வோன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தின் போது அமெரிக்கா – வடகொரியா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் மத்தியஸ்தராகச் செயல்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது, ஆனால் அத்தகைய யூகங்களை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போது வடகொரியா, ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகவும், அதன் பொருளாதாரத்திற்கு சீனா இன்றியமையாத நாடாகத் திகழ்வதாகவும் விவியன் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனது முந்தைய பயணத்துடன் ஒப்பிடுகையில், தென்கொரியாவுடன் மீண்டும் இணைவது என்ற கொள்கையை வடகொரியா தற்போதைய சூழலில் முற்றிலும் நிராகரித்துள்ளதை அவர் கவனித்துள்ளார். சர்வதேச நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் கோவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பிறகும், வடகொரியாவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நவீன மின்-வணிக வசதிகள் போன்ற வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகள் வடகொரியா விவகாரத்தில் “மூலோபாயப் பொறுமையைக்” (Strategic Patience) கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அரங்கில் வடகொரியாவின் குரல் ஒலிக்க வேண்டியது அவசியம் என்பதால், ஜூலை மாதம் மணிலாவில் நடைபெறவுள்ள ஆசியான் பிராந்திய கூட்டமைப்பின் (ARF) பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு வடகொரிய வெளியுறவு அமைச்சருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய நிச்சயமற்ற இந்தச் சூழலில், சிறிய நாடான சிங்கப்பூர் அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறந்து வைக்கவே விரும்புவதாக அவர் கூறினார்.