லாகூரில் டிக்டாக் வீடியோ எடுப்பதற்காக கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி தாக்கியதில் 19 வயது பண்ணை ஊழியர் உயிரிழந்தார்; இருவர் கைது.
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகக் கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி தாக்கியதில் 19 வயது இளைஞர் உயிரிழந்தார். பண்ணை ஊழியரான தல்ஹா என்பவரே இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நௌமன் ஹசன் என்ற சமூக வலைதள பிரபலம் வீடியோ பதிவு செய்வதற்காகப் புலியைக் கூண்டிலிருந்து வெளியே விடுமாறு கேட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த புலி தல்ஹாவைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை தனியார் வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணையில் நடந்த இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தல்ஹா, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்தபோது, அதே பண்ணையில் பணிபுரியும் தல்ஹாவின் தந்தையும் சகோதரர் ஹாஷிமும் உடனிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் நாய் கடித்ததாலேயே இளைஞருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி உண்மையை மறைக்க முயற்சி நடந்ததாகவும், விசாரணையில் புலி தாக்கியதே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பண்ணையின் உரிமையாளர் ஃபயாஸ் மற்றும் டிக்டாக் பிரபலம் நௌமன் ஹசன் ஆகிய இருவரையும் கஹ்னா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். “பொழுதுபோக்கு அல்லது டிக்டாக் மோகத்திற்காக மனித உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என லாகூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. மேலும், அலட்சியம் மற்றும் உண்மையை மறைக்க முயன்ற அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய பெண் புலி தற்போது வனவிலங்குத் துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் பண்ணையில் புலியை வளர்ப்பதற்கான முறையான உரிமங்கள் பெறப்பட்டிருந்தனவா மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.