Posted in

74 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி தலைவராக பாகிஸ்தான் தேர்வு

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டிற்கான சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் 1953ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 74 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மீண்டும் இவ்வமைப்புகளின் ஆளுநா் குழுத் தலைமைப் பொறுப்பை வகிக்கவுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் அஹத் கான் சீமா (Ahad Khan Cheema) இந்த சர்வதேச அமைப்புகளின் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்துவார் எனப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நிதியத்தின் பல கடன் திட்டங்களின் கீழ் செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு, இந்த சர்வதேசத் தலைமைப் பொறுப்பு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடுகளின் நிதித் தேவைகள், சர்வதேச நிதியுதவிகள் மற்றும் பன்னாட்டுக் கூட்டுறவுகளை வலுப்படுத்துவதில் பாகிஸ்தான் தீவிரமாகச் செயல்படும் என அமைச்சர் அஹத் கான் சீமா குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச நிதி அமைப்புகளில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 9 வரை வாஷிங்டனில் நடைபெறவுள்ள சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டை பாகிஸ்தான் தலைமை ஏற்று நடத்தவுள்ளது.

பாகிஸ்தானின் இந்த புதிய தலைமைப் பொறுப்பு சர்வதேச நிதி நிலைத்தன்மை மற்றும் பிராந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.