ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதி மற்றும் வோல்கா பிராந்தியங்களை இலக்காகக் கொண்டு உக்ரைன் தீவிரமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக மாஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 22 குடிமை விமான நிலையங்களில் அவசரகாலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகார அமைப்பான ‘ரோசவியாட்சியா’ (Rosaviatsiya) உறுதிப்படுத்தியுள்ளது.
தலைநகர் மாஸ்கோவை நோக்கிய வந்துகொண்டிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களைத் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்க் நகர மேயர் செர்கெய் சோபியானி தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் வான்வழித் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பிவிடப்பட்டதோடு, பல விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் உள்ள வனுக்கோவோ, டொமடோடேவோ, ஷெரெமெட்டியேவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி ஆகிய நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களின் சேவைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
தாக்குதல் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்ட போதிலும், உரிய நேரத்தில் பாதுகாப்புப் படையினர் அவற்றை அணைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், நிலைமை சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.