பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெரும் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழநி கோயில் நில மோசடி வழக்கின் விசாரணையை சிபிசிஐடி அமைப்பிடமிருந்து சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் சிறைக்காவலில் இருந்தபோது திடீரென உயிரிழந்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், வழக்கு விசாரணையை திசைதிருப்பவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் உட்படப் பத்திரப்பதிவுத் துறையின் பல உயர் அதிகாரிகளுக்கு இந்த ரூ.100 கோடி நில ஆவண முறைகேட்டில் தொடர்பிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தினர்.
மனுதாரர்களின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு மற்றும் காவல் துறை தரப்பில் விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். ஏற்கனவே கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்திலேயே சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருப்பது பழநி நில மோசடி வழக்கில் புதிய திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.