சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அப்பால் ஒன்பதாவது கோள் ஒன்று இருப்பதாக நீண்டகாலமாக நிலவிவரும் கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில், முதற்கட்ட அகச்சிவப்பு (Infrared) ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தைவானில் உள்ள தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகத்தைச் (National Tsing Hua University) சேர்ந்த வானியலாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த ஆதாரம் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், ஒன்பதாவது கோளைத் தேடும் முயற்சியில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன.
வானியலாளர்கள் 23 ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்ட பழைய அகச்சிவப்பு விண்வெளித் தரவுகளை ஒப்பாய்வு செய்தபோது, மெதுவாக நகரக்கூடிய ஒரு விசித்திரப் பொருள் தன் இடத்தை மாற்றியிருப்பதை அடையாளம் கண்டுள்ளனர். அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஐராஸ் (IRAS) செயற்கைக்கோள் மற்றும் ஜப்பானின் அகாரி (AKARI) விண்வெளித் திட்டங்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான அகச்சிவப்புத் தரவுகளைப் பரிசீலித்த பின்னரே இந்த முக்கிய பொருள் கண்டறியப்பட்டது. இது மிகவும் மங்கலான ஒளியுடனும், சூரியனில் இருந்து மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளுக்கு உரிய மெதுவான நகர்வுடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.
அதேவேளையில், இந்தத் தரவு மட்டுமே 9-வது கோள் இருப்பதை முழுமையாக உறுதிப்படுத்திவிடாது என்றும், இது மேலதிக ஆய்வுகளுக்கான ஒரு சாத்தியமான இலக்கு மட்டுமே என்றும் ஆய்வுக் குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இது குறித்து விளக்கிய ஆராய்ச்சியாளர்கள், இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பதிவான நகர்வை மட்டும் வைத்து ஒரு கோளின் துல்லியமான சுழற்சிப் பாதையைக் கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை ஈர்ப்பு விசை மாற்றங்களை வைத்து மட்டுமே கணிக்கப்பட்டு வந்த ஒன்பதாவது கோளுக்கு, தற்போதுதான் முதல்முறையாகப் புலப்படக்கூடிய ஆதாரம் கிடைத்துள்ளதாக அறிவியல் சமூகம் கருதுகிறது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த விசித்திரப் பொருளின் நகர்வு மற்றும் அமைப்பை உறுதிப்படுத்த நவீன தொலைநோக்கிகள் மூலம் கூடுதல் கண்காணிப்புகள் தேவைப்படுகின்றன. எதிர்காலத்தில் செயல்படவுள்ள வேரா சி. ரூபின் கண்காணிப்பகம் (Vera C. Rubin Observatory) போன்ற அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்யும்போது, இந்த ஒன்பதாவது கோள் உண்மையிலேயே உள்ளதா என்பது குறித்த தெளிவான உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.