பிரிட்டனின் துறைமுக நகரமான போர்ட்ஸ்மவுத்தில் (Portsmouth) பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 140 குடியேறிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளை முற்றுகையிட்டு, தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்தால் அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது.
பிரான்சின் நோர்வாண்டி பகுதியிலிருந்து இங்கிலீஷ் கால்வாய் வழியாக ஆபத்தான முறையில் ஒரே படகில் 140-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் போர்ட்ஸ்மவுத் கரைக்கு வந்தடைந்தனர். தகவலறிந்து அங்குத் திரண்ட ‘பேட்ரியாட் பிளாட்ஃபார்ம்’ (Patriot Platform) உள்ளிட்ட தீவிர வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், குடியேறிகளைப் பராமரிப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேருந்துகளை மறித்து வீதிகளை முடக்கினர்.
கருப்பு ஆடைகள் மற்றும் முகமூடிகள் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட முயன்றதால், சம்பவ இடத்தில் கலவர தடுப்புக் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் வெடிப்பதைத் தடுக்கும் வகையில், காவல் துறை அதிகாரிகள் ‘இரும்பு வளைய பாதுகாப்பு’ (Ring of Steel) அமைத்துத் தடியடி மற்றும் மிளகுத் தெளிப்பான்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் செயல்படும் இத்தகைய வன்முறைப் போராட்டங்களைச் சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரிட்டன் அரசு கண்டித்துள்ளது. மேலும், நிலைமையைக் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஹாம்ப்ஷயர் காவல் துறை அப்பகுதியில் சிறப்புத் தடை உத்தரவை (Dispersal Order) பிறப்பித்து, வன்முறையில் ஈடுபட்ட பலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.