பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டப் புகார்களின் கீழ் தேடப்பட்டு வரும் ஜெம் குழும நிறுவனங்களின் தொடர்பில் இயங்கிய பிரகாஷ் கண்ணையா என்பவரின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஜெம் வீரமணிக்குச் சொந்தமான சொத்துகளை விற்றுப் பணமாக்கியதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பணம், நிலங்கள் மற்றும் பெருமளவில் தங்கம் வாங்கியதற்கான ஆதாரங்கள் காவல்துறையின் கையில் சிக்கியுள்ளன. தலைமறைவாக உள்ள பிரகாஷ் கண்ணையாவிற்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள காவல் துறையினர், தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையைத் தவிர்க்க முயன்ற பிரகாஷ் கண்ணையாவின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை சிறப்புப் போக்சோ நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இத்தகைய பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்கள் மற்றும் சொத்து விற்பனை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால், அவரை நெருங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பிரகாஷ் கண்ணையா சிக்கியுள்ள விவகாரமும், கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ள சொத்து விவரங்களும் அரசியல் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளன. குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்தவர்களின் பினாமி சொத்துகள் மற்றும் நிதி ஆதாரங்களை முடக்கும் நடவடிக்கைகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள பிரகாஷ் கண்ணையாவைக் கண்டறிய சர்வதேச காவல் துறையின் உதவியை நாடப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
விரைவில் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்த முக்கியத் தகவல்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.