தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் தேமுதிக குறித்துத் தெரிவித்து வரும் விமர்சனங்களுக்குக் காரசாரமான பதிலடிகளைக் கொடுத்தார்.
முன்னதாகக் கூட்டணி அமைப்பது குறித்து விசிக தலைவர்கள் பேசி வந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணி மாற்றங்கள் குறித்துத் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தைக் கிளப்பியிருந்தன. இதற்கு நேரடியாகப் பதிலடி கொடுத்த பிரேமலதா, “அன்று கேப்டன் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு எங்களுடன் தேர்தல் களத்தில் நின்றவர் தான் திருமாவளவன். ஆனால் இன்று தேமுதிகவைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியா அல்லது தேமுதிக மீது ஏற்பட்டுள்ள பயமா?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், விசிக தற்போதைய ஆளும்கூட்டணியில் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரேமலதா, “அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிந்த உண்மை. அதை மறைப்பதற்காகக் ‘குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகப் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி வருகின்றனர்” என மிகக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான இழிவான பேச்சுகள் மற்றும் அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை யார் முன்வைத்தாலும் தேமுதிக அதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் கண்டித்தார். வரவிருக்கும் தேர்தல் களம் சூடேறி வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையே வெடித்துள்ள இந்த நேரடி வார்த்தை போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.