அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் அமெரிக்காவில் விரைவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெதன்யாகு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த தொலைபேசி அழைப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையால் இரு தலைவர்களுக்கும் இடையே லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் (Gulf Countries) உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இஸ்ரேலின் நெகேவ் (Negev) பாலைவனப் பகுதிக்கு மாற்றுவது குறித்த ரகசியத் திட்டங்கள் இந்தச் சந்திப்பில் முதன்மை விவாதப் பொருளாக இருக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவின் இந்த அதிரடி உத்திக்கு பின்னால் போர்க்களத்தின் கடுமையான எதார்த்தங்கள் ஒளிந்துள்ளன. கடந்த பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் அலை அலையாகப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் புகழ்பெற்ற ‘ஐந்தாவது படை’ (Fifth Fleet) தலைமைத் தளம் மட்டுமே சுமார் 400 மில்லியன் டாலர் அளவிற்குப் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Wall Street Journal) புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததை அடுத்து, வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரானின் ஏவுகணைகளின் எல்ல வரம்பிற்குள் மிக எளிதாகச் சிக்கக்கூடிய பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள தங்களின் ராணுவ இருப்பைக் குறைத்துக் கொண்டு, அவற்றை மேற்கு நோக்கி நகர்த்த அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்பொழுது திட்டமிட்டு வருகிறது. இதற்காக இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் நெகேவ் பாலைவனப் பகுதி மிகவும் பாதுகாப்பான மற்றும் உகந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெகேவில் உள்ள இஸ்ரேலிய வான்படைத் தளங்களை விரிவாக்கம் செய்து, அங்கு அமெரிக்கப் படைகளையும் அதிநவீனப் போர் விமானங்களையும் நிலைநிறுத்துவதன் மூலம் ஈரானின் அச்சுறுத்தல்களில் இருந்து தங்களின் ராணுவச் சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது.
இருப்பினும், இந்த ராணுவத் தளம் மாற்றும் திட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு புதிய புவிசார் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா தனது தளங்களை இஸ்ரேலுக்குள் கொண்டு வருவதை லெபனான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எதிரான நேரடி ஆக்கிரமிப்பாகவே கருதுகின்றன. மேலும், சமீபத்தில் அமெரிக்காவுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் சேர்க்கப்படாததால் அதிருப்தியில் உள்ள நெதன்யாகு, இந்த அமெரிக்க ராணுவத் தளங்கள் மாற்றத்தின் மூலம் தங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள முயல்கிறார். அதே வேளையில், “அமெரிக்காவின் நிதி உதவி எங்களுக்கு இனித் தேவையில்லை; நாங்கள் சுயசார்புடையவர்கள்” என நெதன்யாகு அண்மையில் அறிவித்திருந்த சூழலில், இந்த ராணுவக் கூட்டணி மாற்றம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.