உக்ரைனின் தீவிரமான ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெற வேண்டிய ரஷ்யக் கடற்படை தின (Navy Day) அணிவகுப்பு விழாவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பங்கேற்க வேண்டிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கடற்படைப் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொலைக்காட்சியில் உரையாற்றிய புதின், உக்ரைனின் எதிர்காலம் குறித்தும் சோவியத் வரலாறு குறித்தும் நீண்டதொரு உரையை அளித்துள்ளார்.
ரஷ்யக் கடற்படையின் மையப் பகுதியான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரான்ஸ்டாட் பகுதிகளில் உக்ரைன் நடத்திய சமீபத்திய வெற்றிகரமான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பாதுகாப்பு சூழல் மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்பு மண்டலங்களின் செயல்திறன் குறித்த கேள்விகள் எழுந்துள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் சர்வதேசக் கப்பல்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதானக் கடற்படை அணிவகுப்பை ரத்து செய்ய கிரெம்ளின் நிர்வாகம் முடிவெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடிப் பிரம்மாண்ட அணிவகுப்பைத் தவிர்த்துவிட்டுத் தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் புதின், “உக்ரைன் நாட்டின் நிலப்பரப்புகள் வரலாற்று ரீதியாக போலந்து, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்குத் திரும்பச் சென்றுவிடும்; ரஷ்யாவால் மட்டுமே உக்ரைனின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று நீண்ட உரையாற்றினார். பிரம்மாண்டமான விழா ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட சர்வதேச நெருக்கடியை திசைதிருப்பும் நோக்கிலேயே புதின் சோவியத் தலைவர் ஸ்டாலினின் முடிவுகள் குறித்தும் உக்ரைனின் சரிவு குறித்தும் பேசியதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடங்கியதற்குப் பிறகு, உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் ரஷ்ய எல்லைக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் ஊடுருவி இராணுவ மையங்களைத் தாக்கி வருகின்றன. புதினின் சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வரை உக்ரைன் ட்ரோன்களின் வரம்பு நீண்டுள்ளது ரஷ்ய அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், கடற்படை தின அணிவகுப்பு இரண்டாவது ஆண்டாகத் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.