Posted in

லாரன்ஸின் ‘தெருநாய், பிஸ்கட், பிரியாணி’ ஒப்பீடால் TVK தொண்டர்கள் கொந்தளிப்பு !

திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்குள் நுழையப் போவதாக பரபரப்பான எதிர்பார்ப்புகளை கிளப்பிக் கொண்டிருக்கும் நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், தற்பொழுது நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேச்சு ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் தீயாய் பரவி பெரும் புயலை கிளப்பியுள்ளது. அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) இணைந்து செயல்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த அதிரடி பிரஸ் மீட் அரங்கேறியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக மற்றும் புதிய அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் ஒரு புதிய வாடகை வீட்டிற்குள் நுழைவதை உவமையாகக் கூறி விளக்கத் தொடங்கினார். “ஒரு புதிய வாடகை வீட்டுக்கு போகும்போது வெளியே இருந்து பார்க்க நல்லாத்தான் இருக்கும், ஆனா உள்ளே போனாதான் பைப் சரியில்லையா, ஃபேன் சுத்தலையா, பெயிண்ட் கொட்டுதான்னு தெரிய வரும்” என்று ஆரம்பித்தவர், அடுத்த நொடியே யாரும் எதிர்பாராத வகையில் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அரங்கையே அதிர வைத்தார்.

தொடர்ந்து பேசிய லாரன்ஸ், “ஒரு புதிய ஏரியாவுக்குள் போகும்போது அங்க இருக்குற தெருநாய் கூட நம்மளப் பாத்து கத்தும், யாருடா இது புது ஆளு வந்திருக்காங்கன்னு நினைக்கும். அந்த தெருநாய்க்கு புடிச்ச பிஸ்கட்ட போடணும். ஆனா ஒரு சில தெருநாயங்க பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி தான் சாப்பிடும், நான்வெஜ் தான் சாப்பிடும். அதுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு அத போட்டு அது நம்மள கத்தாம பாத்துக்கணும்” என்று மிக விசித்திரமான, சர்ச்சைக்குரிய கருத்தை ஆக்ரோஷமாக முன்வைத்தார். ஒரு வீட்டுக்கும் நாய்க்கே இவ்வளவு விஷயங்கள் தேவைப்படும் போது, ஒரு நாட்டை கையில் கொடுத்திருக்கும் போது புதியவர்களுக்கு கொஞ்சமாவது டைம் கொடுக்க வேண்டும் என்று அவர் நியாயப்படுத்த முயன்றார்.

இருப்பினும், அரசியலுக்கு வரத்துடிக்கும் ஒரு பொது ஆளுமை, செய்தியாளர்கள் சந்திப்பில் ‘தெருநாய் குரைக்கும்’, ‘அதற்கு பிஸ்கட்டும் பிரியாணியும் போட வேண்டும்’ என்று பேசியது அரசியல் விமர்சகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் முகச்சுளிப்பையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் யாரை நோக்கி அவர் ‘தெருநாய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், யாரை சரிக்கட்ட ‘பிரியாணி போட வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார் என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன. அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் முன்பே வார்த்தைகளை கவனமாகக் கையாளாமல் ராகவா லாரன்ஸ் வரம்பு மீறிப் பேசியுள்ளதாகக் கூறி இந்த வீடியோ கிளிப் தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.