Posted in

30 வயது தாண்டிவிட்டதா? அசத்தும் தமிழக அரசின் ‘நலம் 360’ திட்டம்!

தமிழ்நாட்டில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துப் குடிமக்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை முற்றிலும் இலவசமாக வழங்கும் ‘நலம் 360’ (Nalam 360 Master Health Checkup) என்ற புதிய திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் போது இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு, இதற்கென முதற்கட்டமாக ₹51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரத்த அழுத்தம் (BP), ஈசிஜி (ECG), ரத்த சர்க்கரை அளவு (Random Blood Sugar), ஹீமோகுளோபின், ரத்த அணுக்கள் பரிசோதனை, யூரியா, கிரியேட்டினின், கொலஸ்ட்ரால், சிறுநீரகப் பரிசோதனை மற்றும் புற்றுநோய் ஆரம்பக்கட்டக் கண்டறிதல் உள்ளிட்ட 14 முக்கியமான உடல் பரிசோதனைகள் ஆண்டுதோறும் இலவசமாகச் செய்யப்பட உள்ளன. தொற்றா நோய்களை (Non-Communicable Diseases) ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மாநிலம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 295 தாலுகா அரசு மருத்துவமனைகள், 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,257 அரசு சுகாதார மையங்களில் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் முன்பதிவு அடிப்படையில் சுகாதார ஊழியர்கள் வீட்டிற்கே நேரில் சென்று மாதிரி சேகரிக்கும் ‘வீடு தேடி ஆய்வக சேவை’ (Home-Based Diagnostic Services) முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ‘நலம் 360’ மொபைல் செயலியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. நோய்கள் தீவிரமடைவதைத் தடுத்து, மக்களின் வாழ்நாளை ஆரோக்கியமாக நீட்டிக்க வழிவகை செய்யும் தமிழக அரசின் இந்த இலவச மாஸ்டர் ஹெல்த் செக்கப் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.