Posted in

ரியாத் விமான நிலைய அருகே பயங்கர வெடிசத்தம்: அராம்கோ எரிபொருள் தொட்டியில் தீப்பற்றி அடர்ந்த புகை!

சவூதி அரரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள கிங் காலித் பன்னாட்டு விமான நிலையத்திற்கு (King Khalid International Airport) அருகே சனிக்கிழமை சக்திவாய்ந்த வெடிசத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பிரபல சவூதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்புத் தொட்டி ஒன்றில் தீப்பற்றி எரிந்ததால், விமான நிலைய வளாகம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாகக் காட்சி அளித்தது.

முன்னதாக அதிகாலை 3 மணியளவில் ரியாத் மற்றும் அல்-கார்ஜ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அலைபேசிகளுக்கு அவசர வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை (Hostile Aerial Threat Alert) அனுப்பப்பட்ட சில மணி நேரங்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகரின் பல பகுதிகளில் அடுத்தடுத்து வெடிசத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த நிலையில், விமான நிலைய நெடுஞ்சாலை மற்றும் முனையக் கட்டடங்களுக்குப் பின்புறம் உள்ள எரிபொருள் தொட்டிகளில் இருந்து ராட்சத அளவில் தீப்பிழம்புகளும் புகையும் எழும் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. விமானப் போக்குவரத்து கண்காணிப்புத் தளமான ‘ஃப்லைட்ராடார்24’ (FlightRadar24), ரியாத் விமான நிலையத்தை அதிகபட்சப் பாதிப்புப் பட்டியலான ‘5.0 டிராப்ஷன் இண்டெக்ஸ்’ பிரிவில் சேர்த்து, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பல மணி நேரம் தாமதமாக இயங்குவதாகவும் அறிவித்துள்ளது.

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அராம்கோ எரிபொருள் தொட்டியில் எரிந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இத்தாக்குதலின் பின்னணி மற்றும் சேத விவரங்கள் குறித்துச் சவூதி பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.