ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் ஆய்வுக்கூட சோதனைக் குழாய் உடைந்ததில், ஆபத்தான பிளேக் நோய் தொற்று ஏற்பட்டு 28 வயது பெண் தொழில்நுட்ப ஊழியர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இர்குட்ஸ்க் தொற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த தாரியா ஷிபிலோவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி மாதிரி சேகரிப்பின் போது, பிளேக் பாக்டீரியா அடங்கிய சோதனைக் குழாய் தவறுதலாக உடைந்ததில் அவருக்குத் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடுமையான நுரையீரல் அழற்சி அறிகுறியுடன் ஷெலெகாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 2 அன்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொற்றின் துல்லியமான காரணம் குறித்து ரஷ்ய அதிகாரப்பூர்வ தரப்பில் இதுவரை முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 197 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இர்குட்ஸ்க் பிராந்திய ஆளுநர் இகோர் கோப்சேவ் வெளியிட்ட தகவலின்படி, கண்காணிப்பில் உள்ள நபர்களுக்கு இதுவரை நோய் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக (Negative) வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாகக் கூறி இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலமையைக் கண்காணிக்க ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான ‘ரோஸ்போட்ரெப்னாட்சோர்’ தலைவர் அன்னா போபோவா நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் இச்சம்பவம் உற்றுநோக்கப்படுகிறது.