ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியும், மாஸ்கோவில் உள்ள குர்ச்சடோவ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kurchatov Institute) தலைவருமான மிகைல் கோவல்சுக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற மரபணு மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், தங்கள் ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள 22 இனங்களைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட குரங்குகளில், 18 முதல் 30 வயதுக்கு மேற்பட்ட முதிய குரங்குகளைத் தனியாகப் பிரித்து ஆய்வு செய்து வருவதாகக் கூறினார். வயதாவதற்கான உயிரியல் காரணங்களைக் கண்டறிய, இந்தக் குரங்குகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரத்த நாளங்கள் மற்றும் மூளை செயல்பாடுகள் குறித்து முழுமையான உயிர்வேதியியல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2025-ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின் போது, மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிபர் புடின் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும், புடினின் மூத்த மகள் மரியா வோரோன்ட்சோவாவும் மாஸ்கோவில் தொடங்கப்பட்டுள்ள ஆயுள் நீட்டிப்பு ஆய்வகத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். குரங்குகள் மனிதர்களுக்கு மிக நெருக்கமான உயிரினம் என்பதால், அவற்றின் மூலமாகக் கண்டறியப்படும் முடிவுகள் மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க அடித்தளமாக அமையும் என்று கோவல்சுக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சிக்காக ரஷ்ய அரசாங்கம் 2027 முதல் 2029 வரையிலான பட்ஜெட்டில் ‘புதிய சுகாதாரப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் சுமார் 217 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் மனித ஆயுளை நீட்டிப்பதற்கான நடைமுறை மைல்கற்களை எட்டும் இலக்குடன் ரஷ்ய விஞ்ஞானிகள் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.